கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 7

“என்னடா” சுந்தரி சற்றே பதறினாள்.
“ஒண்ணுமில்லே அக்கா … செல்வாவுக்கு சுகன்யான்னு யாரையும் தெரியாதாம்” அவர் தன் மருமளைப் பார்த்து புன்னகைத்தார்.
“காலையில மீனா எனக்கு கால் பண்ணி – நான் செல்வாவோட தங்கை பேசறேன்னு சொன்னா – நான் சொன்னேன் செல்வான்னு எனக்கு யாரையும் தெரியாதுன்னு” சுகன்யா களையிழந்த முகத்துடன் முனகினாள்.
“மாமா, செல்வா என்ன சொல்றான்?” சுகன்யா அவர் முகத்தை ஆவலுடன் பார்த்தாள்.
“சுகா, நீ காலையில அவனைத் தெரியாதுன்னு சொன்னே, அவன் மாலையில உன்னைத் தெரியாதுங்கறான். இதைத் தவிர அவன் வேற எதுவும் பேசலை. உங்க ரெண்டு பேருக்கிட்டயும் முதிர்ச்சியில்லை. ஒருத்தருக்கொருத்தர் சின்னப்பிள்ளைத்தனமா சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க.”
“மாமா, அவங்க வீட்டுக்கு நீங்க போனா நானும் வரணுமா? அவனோட அம்மாவை நினைச்சா எனக்கு பயமா இருக்கு.”
“உரல்ல தலையை குடுத்துட்டு உலக்கைக்கு பயந்தா முடியுமடா கண்ணு?” அவர் உரக்கச் சிரித்தார்.
“என்னடா ரகு, நாளைக்கு அந்த பையன் போன் பண்ணுவானா?”சுந்தரி சந்தேகமாக இழுத்தாள்.
“என்னாக்கா பேசறே, நீ ஏன் டென்ஷன் ஆகறே? இவ அப்பா மேல இவளுக்கு ஆறாத கோபம், தீராத கோபம் யாருக்கு லாபம்? உன் பொண்ணு கோபத்துல புத்தி கெட்டுப்போய் அவனை அர்த்தமில்லாம கத்திட்டு வந்துட்டா? அதோட நின்னாளா? சமாதானமா பேசின அவன் தங்கச்சி கிட்ட அவனை எனக்கு தெரியாதுன்னு ரவுசு பண்ணா, இப்ப அந்த காளை தலையை ஆட்டி என்னை முட்டப்பாக்குது. அவன் இவளை கட்டிக்க மாட்டேன்னு நேரா இவகிட்ட சொன்னானா? இல்லயே? நம்ம பொண்ணை கட்டிக்க அவனுக்கு கசக்குதா? இதை வெச்சுத்தான் நான் சொல்றேன்; அவன் நாளைக்கு கண்டிப்பா நாம சொல்ற இடத்துக்கு வருவான் பாரு.”
“அக்கா, ஒரு வேளை நீ நினைக்கற மாதிரி அவன் வராமா இருக்கறதுக்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கு; அவன் தலையை ஆட்டி தன் கொம்பால நம்பளை முட்ட வர்றதுக்கு சுகா தான் இடம் குடுத்துட்டா? இவதானே சொல்லிட்டு வந்திருக்கா, நீயும் வேணாம் உன் கல்யாணமும் வேணாம்ன்னு?”
“அப்படி அவன் நாளைக்கு வரல்லேன்னா, நான் நேரா அவனோட அப்பன் கிட்ட போயிடறேன். நல்லத்தனமா பேசிப் பாக்கறேன், மசியலனா; உனக்காக ஒரு தரம் தூக்கின அருவாளை, இவளுக்காக ஒரு தரம் தூக்கிட வேண்டியதுதான்?” ரகு குலுங்கி குலுங்கி சிரித்தார். அவர் தோளில் தன் தலையைச் சாய்த்து கொண்டிருந்த சுகன்யாவின் உடல் லேசாக நடுங்கியது, இது எங்கே போய் முடியும்? என்னால எத்தனை பேருக்கு பிரச்சனை? அவள் உடல் நடுங்கியதை உணர்ந்த ரகு,
“சுகா கவலைப்படாதேம்மா எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னு நம்புவோம். நீ போய் படுத்து நிம்மதியா தூங்கு; மீதியை காலையில பாத்துக்கலாம்.”அவர் சிரித்தார். அம்மாவின் முதுகு பக்கமாக ஒருக்களித்து படுத்து தன் வலக்கையால் அவள் இடுப்பை கட்டிக்கொண்ட சுகன்யாவிற்கு லேசில் தூக்கம் வரவில்லை. அவள் தூங்கவும் இல்லை; விழித்திருக்கவும் இல்லை; இரண்டும் கெட்டான் நிலையில் அவள் இமைகள் மூடியிருந்தன; ஆனால் மனம் மட்டும் இன்னும் அயராமல் விழித்திருந்து பட்டாம்பூச்சியாக அவள் எண்ணச் சோலையில் இறக்கை அடித்து பறந்து கொண்டிருந்தது.

அம்மா சரியாத்தான் கேட்டா? அவ கேட்ட ஒரு கேள்விக்கு கூட என்னால பதில் சொல்லமுடியலயே; செல்வா இன்ஸல்ட் பண்ணிட்டான்ற கோபத்துல என்னைப் பாக்காதே, எங்கிட்ட பேசாதேன்னு சொல்லிட்டு வந்துட்டேனே? செல்வாவை என்னால அவ்வளவு சுலபத்துல மறந்துட முடியுமா? இந்த மனசு பகல்லே ஒண்ணு பேச சொல்லிச்சு; யோசிக்காம பேசிட்டேன்; இப்ப ராத்திரியில ஓஞ்சு படுத்த பின்னாடி, அதே பாழும் மனசு சும்மா இருக்குதா? அவனையே திரும்ப திரும்ப நெனைக்குது. ச்சை … அவனை திட்டிட்டு வந்ததுக்கு அப்புறம்தான் அவன் ஞாபகம் அதிகமா வருது? நமக்கு ரெண்டு மனசு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்? ஒரு மனசால அவனைத் திட்டலாம்? ஒரு மனசால அவனை சீண்டி சிரிச்சு சிரிச்சு ஜாலியா இருக்கலாம். நான் காலையில அவனை அவ்வளவு தூரம் வாரி கொட்டி திட்டினேன்; பேசாமதானே இருந்தான். ஒரு வார்த்தை பேசலையே? அவன் என்னை நேசிக்கவேதானே என்னைத் திருப்பித் திட்டலை. அப்படின்னா இப்ப ஏன் என்னை தெரியாதுன்னு நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக்கை மாமாகிட்ட சொல்றான்?

அவனும் என்னை மாதிரி மனுஷன் தானே? அவனுக்கு மட்டும் கோவம் வராதா? மீனாதான் சொன்னாளே அவன் அம்மா வேற அவனை சண்டைப் போட்டு திட்டினான்னு; அவன் அப்பா சும்மா இருக்கார்ன்னா அவர் எங்க காதலை ஆதரிக்கிறாரா? பாவம் அவன் மிருதங்கம் மாதிரி எங்கிட்டவும் ஒதை வாங்கறான்; அவன் அம்மாகிட்டவும் ஒதை வாங்கறான். உன்னை ஆசையா பாக்க வந்திருக்கேன்னு சொன்னான். அப்பாவை பத்தி கேட்டுட்டான்னு, அவனை மூட்டைப் பூச்சியை நசுக்கறமாதிரி அவனைப் பேசவிடாம, என்னை பேச விடுன்னு கத்திட்டு வந்துட்டேன். அதுக்கப்புறம் மீனாக்கிட்ட செல்வாவை தெரியாதுன்னு வம்பு பண்ணேன். என்னை விட சின்னப்பொண்ணு; மீனா எவ்வளவு பொறுமையா எங்கிட்ட பேசினா? ச்சே … ச்சே … எனக்குத்தான் அறிவு இல்லயா? பாவம் செல்வா; சாவித்திரி மேல இருந்த கோவத்தை எல்லாம் அவன் மேல காட்டிட்டேன்; சாவித்திரி எனக்கு எதிரின்னா, அவனுக்கும் எதிரிதானே? நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கணுமோ? செல்வாவின் புன்னகைக்கும் முகம் அவள் மனதிலாடியது.
“பாவம் செல்வா, அவனை கூப்பிட்டு சாரி சொல்லலாமா?” அறிவு கெட்டவளே! செத்த நேரம் பொத்திக்கிட்டு பொழுது விடியற வரைக்கும் சும்மா படுத்து கிடடி; வேலியில போற ஓணானை எடுத்து உள்ள வுட்டுக்காதேடி? இப்ப உன் மாமா வேற பிக்சர்ல வந்துட்டார். நீ அவன் கிட்ட ஏதாவது பேசி, அவன் ஒண்ணு பேசி, நீ ஒண்ணு பேசி, ரெண்டு பேரும் சேர்ந்து குட்டையை குழப்பணுமா நடுவுல, இப்ப நீ செல்வா கிட்ட பண்ற டீலிங் அவருக்கு புடிக்குமோ; புடிக்காதோ? செல்வா ஜானகியை போய் பாத்து இருப்பானா? அங்க என்ன நடந்து இருக்கும்? அதை தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது. அடியே! அவன் அவளைப் பாத்தா என்ன? பாக்கலைன்னா உனக்கு என்ன? மாமா சொன்ன மாதிரி அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை; அவன் ஜானகியை, அவங்க அம்மா சொன்னதுக்காக போய் பாக்கறான்; இது அவனுக்கும் அவங்க அம்மாவுக்கும் நடுவுல இருக்கற விஷயம்; இதை நான் ஏன் எனக்கு அவமானம்ன்னு நெனைக்கணும்? அவள் மனம் அலைந்து களைத்தது … அவள் தூக்கத்திலாழ்ந்தாள் … தூக்கம் வந்த அந்த நொடியை அவள் உணரவில்லை; தூக்கம் தொடங்கும் அந்த தருணத்தை, கணத்தை, நொடியை உணர்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா???? *** புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது செல்வாவின் வீடு. பசி வயிற்றை கிள்ளியெடுத்த போதிலும் நாலு பேரும் ஆளுக்கொரு மூலையாக யாரும் யாரிடமும் பேசாமல் அமைதியாக கிடந்தார்கள். மீனா முதலில் எழுந்து மூஞ்சை கழுவி, எண்ணைய் விட்டு சாமி விளக்கை ஏற்றியவள், கிச்சனுக்குள் சென்று இட்லி பானையை அடுப்பில் ஏற்றினாள். தேங்காயை துருவி, உளுத்தம் பருப்புடன், சிவப்பு மிளகாய், வெங்காயம், தக்காளியை வதக்கி, அதனுடன் பச்சை கொத்துமல்லியை சேர்த்து மிக்ஸியில் ரெண்டு சுற்று சுற்றி எடுத்தாள். ஹாட் கேஸில் இட்லிகளை நிரப்பி, சட்னியையும் அதனுடன் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, பசியில்லை என்று சலித்துக்கொண்ட பிடிவாதம் பிடித்த மல்லிகாவையும், பசியுடனிருந்த நடராஜனையும், ஹாலுக்கு இழுத்து வந்து, தட்டில் இட்லியை எடுத்து வைத்து சாப்பிடச் சொன்னாள்.
“ஏண்டி மல்லி, உன் பொண்ணு சட்னி நல்லாத்தாண்டி அரைச்சிருக்கா, உப்பு காரம் சரியாத்தான் இருக்கு இல்லே?”
“ஆமாம், அவளை நீங்க தான் மெச்சிக்கணும், என்னமோ மகராணி, வீடே பத்தி எரியுதேன்னு இன்னைக்கு அடுப்பாங்கரையில நுழைஞ்சிட்டா.”
“மல்லி நான் சொல்றேன்னு நினைக்காதே; வர வர வீட்டுல நீ எதுக்கெடுத்தாலும் சலிச்சுக்கிறே; இன்னும் முழுசா அதுக்கு இருபது முடியலடி, அவ வயசுக்கு அவ பொறுப்பாத்தான் இருக்கா,
“ பக்கத்தில் உட்க்கார்ந்திருந்த அவள் முதுகை தன் இடது கையால் பாசத்துடன் வருடினார். நடராஜனின் வருடலில் அவள் முதுகு சிலிர்த்து குலுங்கியது. அவள் கண்ணோரத்தில் நீர் தளும்பியது.
“கண்ணைத் தொடைச்சுக்கம்மா மல்லி, சட்டுன்னு ரொம்ப எமோஷனலா ஆயிடறே? அப்புறம் டக்குன்னு கண் கலங்கறே; பசங்க பாத்தா அம்மா அழறாளேன்னு அதுங்க மனசு பதறிபோகும். ரெண்டும் உன் மேல உசிரையே வெச்சிருக்குதுங்க.” அவள் எதையோ சொல்லவந்தவள், உணர்ச்சிகளின் உந்துதலால் பேச குரல் எழும்பாமல் விசும்பினாள்.

Leave a Comment

Your email address will not be published.